பட்டுக்கூடு விலை அதிகரிக்குமா?

தருமபுரி, மே 17: பட்டுக்கூடு விலை எப்போது அதிகரிக்கும்? என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு அங்காடியான தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு திருவண்ணாமலை, வேலூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகளை விவசாயிகள் கொண்டு வருகின்றனர். ஏலமுறையில் தினமும் விற்பனை செய்யப்படும் பட்டுக்கூடுகளை தருமபுரியில் உள்ள சுமார் 40 பட்டு உற்பத்தியாளர்கள் வாங்கிச் செல்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் 1 கிலோ ரூ.350 ஆக இருந்த மஞ்சள் பட்டுக்கூடு, மார்ச் மாதத்தில் இருந்து விலை குறைந்து இப்போது 1 கிலோ ரூ.189 ஆக குறைந்துவிட்டது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, மஞ்சள் பட்டுக்கூடு விலை அதிகபட்சமாக 1 கிலோ ரூ.220 என்றும், குறைந்தபட்சமாக ரூ.157-க்கும் விலைபோனது. வெள்ளை பட்டுக்கூடு அதிபட்சமாக ரூ.260-க்கும், குறைந்தபட்சமாக ரூ.227-க்கும் விலை போனது. பிப்ரவரி மாதத்தில் ஒரு கிலோ பட்டு நூல் விலை ரூ.2,900-க்கு விற்பனை செய்யப்பட்டதால் பட்டுக்கூடுகளின் விலையும் அதிகமாக இருந்தது. இப்போது ஒரு கிலோ பட்டு நூலின் விலை ரூ.1,950 ஆக உள்ளதால் பட்டுக்கூடுகளின் விலையும் குறைந்துவிட்டது என பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 2 வாரத்துக்குப்பின் திருமண நிகழ்ச்சிகள் அதிகரிக்கும். அதைத்தொடர்ந்து, பட்டின் தேவை உயரும்போது பட்டுக்கூடுகளின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு தினமும் 3,000 முதல் 5,000 கிலோ வரை பட்டுக்கூடு விற்பனைக்கு வரும். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 3,500 கிலோ பட்டுக்கூடு விற்பனைக்கு வந்தது. பட்டுக்கூடு விலை அதிகரிக்குமா?